Wednesday 15 February 2012

ஜெனரேட்டர், இன்வெர்ட்டர்கள் விலை அதிகரிப்பு

கடலூர், பிப். 15: மின்சாரத்துக்கான இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்ற மாற்று சாதனங்கள் விற்பனை மற்றும் விலை, கடந்த 2 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்து இருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே மின் பற்றாக்குறை உள்ளது. இதனால் நாளொன்றுக்கு ஒருமணி நேரம் இருந்த மின்வெட்டு, இன்று 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. மின் வெட்டு நேரம், மின்வாரியம் அறிவித்த நேரங்களைவிட, அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரம் அதிகம். 

மின்வெட்டால் தொழில் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் சொல்லொணா துயரம் அனுபவிக்கிறார்கள். மின் பற்றாக்குறையை உணர்ந்துள்ள பொதுமக்கள், மின்தடை நேரங்களை அறிவிப்பதை விடுத்து, எப்போது மின்சாரம் நிச்சயம் கிடைக்கும் என்பதை மின்வாரியம் அறிவித்தால் போதும் என்கிறார்கள். மின்சாரம் நிச்சயம் இருக்கும் நேரத்தை அறிவிக்க முடியாத மின்வாரியத்தால் பயனேதும் இல்லை என்கிறார்கள் பொதுமக்கள். 
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 20-க்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்குமேல் மருந்துகள் மற்றும் ரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இவைகள் மின் வெட்டால் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கிறார் சிப்காட் தொழிற்சாலைகளின் தலைவர் இந்திரகுமார்.புயலுக்குப் பின், ஒரு மாதம் முற்றிலும் மின்சாரம் தடைபட்டது. தற்போது தினமும் பகலில் 2 மணி நேரம் மின்வெட்டு, மற்றும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை விளக்குகள் மட்டுமே எரியலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது
 சிப்காட்டில் பெரும்பாலும் ரசாயனத் தொழிற்சாலைகளாக இருப்பதால் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். ஒரு நிமிடம்கூட மின்சாரத்தை நிறுத்த முடியாது. இதனால் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 கோடி மதிப்பிலான ஜெனரேட்டர்களை பயன்படுத்துகிறோம். மின்வாரியம் வழங்கும் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 5.50 என்றால் ஜெனரேட்டர் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 10 ஆகிறது. இதனால் பொருள்களின் உற்பத்திச் செலவு அதிகரித்து சர்வதேச சந்தையில் பொருள்களை நட்டத்துக்கு விற்க நேரிடுகிறது என்றார் அவர்.
 மின்வெட்டால் கடலூர் மாவட்டத்தில் 13 ஆயிரம் சிறுதொழில் கூடங்கள் நலிவடைவதாக மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கச் செயலாளர் கு.ராமலிங்கம் தெரிவித்தார்.புதுவை மாநிலத்தில் மின்தடை இல்லாததால், கடலூர் மாவட்ட சிறு தொழிற்சாலகளுக்குக் கிடைத்த ஆர்டர்கள் பல, புதுவைக்குச் சென்று விட்டன. சிறு தொழில்களில் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயக்கி லாபம் பார்க்க முடியாது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர். உரிமையாளர்கள் வங்கிக் கடன்களை செலுத்த முடியவில்லை என்றார் அவர். மின்வெட்டைச் சமாளிக்க வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்வெர்ட்டர் மற்றும் ஜெனரேட்டர்களை பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். 

மாணவர்களின் படிப்பு தொலைக்காட்சி போன்ற காரணங்களால், வீடுகளுக்கு இன்வெர்ட்டர்கள், ஜெனரேட்டர்கள் அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் வந்துவிட்டன. புதிதாக வீடு கட்டுவோர் கட்டுமானச் செலவில் தற்போது இன்வெர்ட்டர் செலவையும் சேர்த்துவிட்டனர்.
 200 வி.ஏ. முதல் 800 வி.ஏ. வரையிலான (பாட்டரியுடன்) இன்வெர்ட்டர்களை வீடுகளில் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் விலை ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரம் வரை. டி.வி. உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் இயக்கும் வகையில் 1,500 வி.ஏ. திறன் கொண்ட இன்வெட்டர் விலை ரூ. 35 ஆயிரம் வரை. இன்வெட்டர்கள் விலை (பாட்டரியுடன்) கடந்த 2 ஆண்டுகளில் 50 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. பாட்டரிகள் விலை 40 சதம் உயர்ந்து இருக்கிறது.
 வணிக நிறுவனங்களில் 4,000 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் ஜெனரேட்டர்கள் (விலை ரூ. 24 ஆயிரம்) முதல், ஏ.சி. உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் இயக்கும் நிறுவனங்கள் (துணிக்கடைகள், நகைக் கடைகள்), அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்களையும் (விலை ரூ. 5 லட்சம்) பயன்படுத்துகிறார்கள். 
இவற்றுக்கு பெட்ரோல், மண்ணெண்ணெய் அல்லது டீசல் செலவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகம். ஒவ்வொரு முறையும் அவற்றை இயக்க வேண்டும். இன்வெர்ட்டர்கள் தானாக இயங்குபவை. பராமரிப்பது எளிது. மின்சாரம் இல்லாதபோது செலவிட்ட அனைத்து சக்தியையும், மின்சாரம் வந்ததும் இன்வெட்டர்கள் இழுக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் இன்வெர்ட்டர்களை பயன்படுத்துவோருக்கு மின்கட்டடணச் செலவு அதிகரிக்கும் என்கிறார்கள் மின் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Tuesday 14 February 2012

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு நாளைமுதல் நுழைவுச் சீட்டு

சென்னை, பிப். 14: பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு வியாழக்கிழமைமுதல் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.வியாழக்கிழமை (பிப்ரவரி 16) பிற்பகலிலிருந்து சனிக்கிழமை (பிப்வரி 18) வரை நுழைவுச் சீட்டு விநியோகம் செய்யப்படும்.
மார்ச் 8-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வை 8.2 லட்சம் பேர் எழுத உள்ளனர். இவர்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனித் தேர்வர்கள்.இவர்களுக்கான நுழைவுச் சீட்டு விநியோகம் தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:தனித்தேர்வர்கள் தங்களின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்விடத்தின் அடிப்படையில் அருகில் உள்ள தேர்வு மையத்தில்பெயர்பதிவு செய்யப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு வழங்கப்படும் மையங்கள் குறித்த விவரம் அந்தந்த மாவட்டங்களில் பத்திரிகைகள் மூலம் அறிவிக்கப்படும்.தனித்தேர்வர்கள் நுழைவுச் சீட்டைப் பெற்றவுடன், அதில் அச்சிடப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம், தேர்வு எழுத பதிவு செய்யப்பட்டுள்ள பாடங்கள், தேர்வு நடைபெற உள்ள நாள் போன்ற விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.இந்த விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால், நுழைவுச் சீட்டைப் பெற்றவுடன் கூடுதல் செயலாளர் (மேல்நிலை), அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 6 என்ற முகவரியில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்ணுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெறாதவர்கள், செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும்.முதல்முறையாக மேல்நிலைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித்தேர்வர்கள் மொழிப்பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்.மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை பிப்ரவரி 20-க்குள் அணுகி அறிந்துகொள்ள வேண்டும்.
கேட்டல், பேசுதல், செய்முறைத் தேர்வு மையத்துக்குச் செல்லும்போது, விண்ணப்பத்தில் பயன்படுத்திய புகைப்படத்தின் நகலையும் எடுத்துச் செல்ல வேண்டும். 
உரிய நுழைவுச் சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார். நுழைவுச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்படாது என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Saturday 4 February 2012

மூத்த மகனுக்கு அரசியல்களம்; இளைய மகனுக்கு சினிமா


சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தனது மகன்களை இரண்டு துறைகளுக்கும் தனித்தனி வாரிசாக களமிறக்க முடிவு செய்துள்ளார்.
மூத்த மகன் அரசியலில் களமிறங்க பயிற்சி பெற்று வரும் நிலையில், இளையமகன் விரைவில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்படவுள்ளார். சினிமா மூலம் அரசியலுக்கு வந்து, தே.மு.தி.க., என்ற கட்சியை உருவாக்கி குறுகிய காலக்கட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்திற்கு உயர்ந்திருப்பவர் விஜயகாந்த். இவருக்கு விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் விஜய் பிரபாகரன், தனியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார். இயைமகன் சண்முக பாண்டியன், சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாண்டு படிக்கிறார். சினிமா, அரசியல், குடும்பம் என மூன்று வேடத்தை கனகச்சிதமாக செய்துவரும் விஜயகாந்த், தனது இரண்டு மகன்களை வாரிசாக களமிறக்க முடிவு செய்துள்ளார்.

மூத்த மகனுக்கு அரசியல் ஆர்வம் அதிகம் இருப்பதால், அவரை அரசியலில் களமிறக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். ஆனால், மற்ற கட்சிகளைப்போல் கொல்லைப் புறம் வழியாக, தனது மகனை அரசியலுக்கு அறிமுகம் செய்ய விஜயகாந்த் விரும்பவில்லை. பல்வேறு அரசியல் பயிற்சிகள் அளித்து, தொண்டர்களுடன் பணியாற்ற வைத்து, குறிப்பிட்ட வயதை கடந்தவுடன், அதன்பிறகே மகனுக்கு கட்சி பதவி வழங்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசக்கூடிய விஜய் பிரபாகர், தற்போது, சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பிரெஞ்ச் மொழி கற்றுவருகிறார். மேலும், அரசியலில் களமிறங்குவதற்கு வசதியாக, விஜயகாந்திற்கு நெருக்கமான ஒய்வுபெற்ற ஐ.ஏ. எஸ்., அதிகாரி ஒருவர் மூலம் நிதி நிர்வாகம், பொது மக்கள் மேலாண்மை, அரசியல் வரலாறு உள்ளிட்ட கல்வியையும் கற்று வருகிறார். தமிழக அரசியலுக்கு இதுபோன்ற அரசியல் பயிற்சிகள் தேவை இல்லை என்றாலும், வரும் காலத்தில் டில்லி அரசியலுக்கு தேவைப்படலாம் என்பதால், அதற்கேற்ப பயிற்சிகளை விஜயகாந்த் ஏற்பாட்டில் கற்றுத்தரப்படுகிறது.

இளையமகன் சண்முகபாண்டியன், தந்தையைப் போல சினிமாவில் கதாநாயகனாக நடித்து, பிரபலம் அடைய வேண்டும் என்று விரும்புகிறார். அவரது ஆசைப்படியே, சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கான பணிகளை விஜயகாந்த் துவக்கியுள்ளார். இதற்காக நடிப்பு, நடனம், சண்டை, உடற்பயிற்சி ஆகியவற்றில் சண்முக பாண்டியன் ஈடுபட்டு வருகிறார். இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப, இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் படம் இருக்க வேண்டும் என்பதால், பல கதைகளை கேட்டு, மூத்த மகன் விஜய் பிரபாகர் ஆலோசனைப்படி நான்கு கதைகளை இறுதியாக விஜயகாந்த் தேர்வு செய்துள்ளார். இதில் ஒரு கதை இறுதி செய்யப்பட்டு, விரைவில் விஜயகாந்த் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

- எஸ்.அசோக்குமார் -