Tuesday 31 January 2012

நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்


சென்னை, ஜன. 31: குணச்சித்திர நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் (72) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.
 சென்னை நந்தனம் பகுதியில் குடும்பத்தாருடன் வசித்து வந்த இடிச்சபுளி செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
 எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், கே.பாக்யராஜ், அஜித் உள்பட பலருடன் சுமார் 120-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார் இடிச்சபுளி செல்வராஜ்.
 எம்.ஜி.ஆரின் "இதயக்கனி', "உலகம் சுற்றும் வாலிபன்' உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
 மறைந்த இடிச்சபுளி செல்வராஜின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. அவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், வசந்தி என்ற மகளும் உள்ளனர்.

Wednesday 4 January 2012

அனைவருக்கும் வி.ஏ.ஓ. பணி


சென்னை, ஜன.4: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமன ஆணையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புதல் என்ற பெயரில், இடஒதுக்கீட்டு சதவீதத்தை விட கூடுதலான இடங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த கே. ராதா உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சுகுணா பிறப்பித்த உத்தரவு:  கிராமப்புற வளர்ச்சிப் பணிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்களின் பணி என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில், காலியாக உள்ள வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்பிட தேர்வு நடத்தப்பட்டு, பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.  எனவே, வி.ஏ.ஓ. பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமண ஆணையை நான்கு வாரத்துக்குள் அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இட ஒதுக்கீட்டு அளவுக்கு மேல் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி இந்த வழக்கின் இறுதி விசாரணையின்போது ஆராய்ந்து, முடிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, எதிர்காலத்தில் வி.ஏ.ஓ. தேர்வு நடைபெறும்போது அதனை சரி செய்து கொள்ளலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.  மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில், கடந்த 2007 - 2008-ம் ஆண்டில் 2,500 வி.ஏ.ஓ.க்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் பின்னடைவு காலிப் பணியிடங்கள் என்ற அடிப்படையில் 197 இடங்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்தது.  இந்நிலையில், கடந்த 21.7.2010 அன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் 1,077 வி.ஏ.ஓ. பணியிடங்கள் பின்னடைவு இடங்கள் என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு சட்ட விரோதமானதாகும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர்.  இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு என்ற அடிப்படையில், இன்னும் 1,232 இடங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.  எனினும், மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசு தலைமை வழக்குரைஞர் தவறான புள்ளி விவரங்களை அளித்துள்ளதாக கூறினார்கள்.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை அனுப்பப்பட வேண்டும் என்றும், வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.
கருத்துகள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனம்

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம் ஜன.,7ல் நடக்கிறது. உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிச.,30ல் துவங்கியது. ஜன.,7ம் தேதி காலை 10.30 மணிக்கு சந்தனம் களைதல், காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் மூலவர் மரகத கல்லால் ஆன நடராஜர் சுவாமிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் துவங்குகிறது.

அடுத்த நாள்(ஜன.,8) அதிகாலை 4 மணிக்கு நடராஜருக்கு சந்தனம் சாற்றுதல், அதன் பின் தீபராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மகேந்திரன் தலைமையில் நிர்வாக அலுவலர் சாமிநாதன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

விழாவை காண தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் ராமநாதபுரம், பரமக்குடி உட்பட பல பகுதிகளில் இருந்து உத்தரகோசமங்கைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

காத்தருள்வாய் ரங்கநாதா...

வைகுண்ட ஏகாதசியான இன்று ஸ்ரீரங்கநாதரை வணங்குவதற்குரிய ஸ்தோத்திரத்தைப் படியுங்கள்.

காவிரியின் நடுவில் ஏழு திருமதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கநாதனே! தாமரை மொட்டு போன்ற விமானத்தில் குடிகொண்டவனே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் துயில்பவனே! யோகநித்திரையில் அனைத்தையும் அறிந்தும் அறியாதது போல இருப்பவனே! இடது கையை இடுப்பில் வைத்திருப்பவனே! ஸ்ரீதேவியும் பூதேவியும் வருடுகின்ற திருப்பாதங்களைக் கொண்டவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைப் போற்றுகிறேன்.

கஸ்தூரி திலகமிட்ட நெற்றி கொண்டவனே! காது வரை நீண்டிருக்கும் அகன்ற கண்களைப் பெற்றவனே! முத்துக்கள் இழைத்த கிரீடம் அணிந்தவனே! பக்தர்களின் மனதை அபகரிக்கும் தேக காந்தி கொண்டவனே! தாமரைமலருக்கு ஈடான அழகுமிக்கவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைக் காணும் பாக்கியம் எப்போது எனக்கு கிடைக்கும்!

மது என்னும் அரக்கனைக் கொன்றவனே! நாராயண மூர்த்தியே! முரனை வென்ற முராரியே! கோவிந்தராஜனே! உன் திருநாமங்களை உரக்கச் சொல்லி வாழ்நாளை எல்லாம் ஒரு நிமிஷம்போல கழிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா? காவிரிக்கரையோரம் வாழ்பவனே! இந்திர நீலமணி போன்ற பேரழகுடன் ஆதிசேஷ சயனத்தில் படுத்திருப்பவனே! உன் அருகில் வாழும் பாக்கியத்தை தந்தருள வேண்டும்.

பெருமானே! புனிதமான காவிரியில் நீராடும் பாக்கியம் எனக்கு வேண்டும். அடர்ந்த பசுமரங்கள் நிறைந்த அழகுமிக்க காவிரி நதிதீரத்தில் நான் வசிக்கும் பேறு பெற வேண்டும். மங்கலம் நிறைந்தவனே! தாமரை மலர் போன்ற கண்களைப் பெற்றவனே! உன்னை பக்தியோடு வணங்கும் பாக்கியத்தை அருள்புரிவாயாக.

ரங்கநாதனே! பாக்கு மரங்கள் நிறைந்ததும், தெளிந்த நீரால் நிரம்பியதும், வேதகோஷத்தால் சூழப்பட்டதும், கிளி, குருவி போன்ற பறவைகள் ஒலியெழுப்புவதும், தரிசித்தவர்க்கு வைகுண்டம் தந்தருளி மோட்சத்தைக் காட்டுவதுமான லட்சுமிகடாட்சம் நிறைந்த ஸ்ரீரங்கத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ?

எம்பெருமானே! தேவலோக நந்தவனத்தில் அமிர்தம் அருந்தும் பாக்கியம் எனக்கு வேண்டாம். தேவர்களில் ஒருவராகவும் நான் மாற வேண்டாம். ஸ்ரீரங்கத்தில் ஒரு நாயாக வாழும் பாக்கியத்தைக் கொடுத்தால் போதும்.

அம்மா! எனக்கு மிகவும் பசிக்கிறது. உடல் நடுங்குகிறது,' என்று சொல்லும் குழந்தையிடம் தாய் எப்படி பாசத்தோடு ஓடி வந்து அணைத்து ஆகாரம் தருவாளோ அதுபோல...ரங்கநாதா! என் துயரத்தைப் போக்க வந்தருள்வாயாக.

இன்று சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியானபரமபதம் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது. முன்னதாக பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி ஏகாதசி விழா துவங்கியது. அதுமுதல் தினமும் ஒரு அலங்காரத்தி்ல பக்தர்களுக்கு நம்பெருமாள் அருள் பாலித்து வந்தார்.
இதனையடுத்து முக்கிய நிகழ்ச்சியான இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்‌சி நடைபெறுகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரத்தின அங்கி , பாண்டினயன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு நகைகள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு நாழிகேட்டான் வாசல்வழி‌யே ‌சென்று கொடிமரத்தை சுற்றிவந்து துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் வந்து சேர்கிறார்.

ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?



மார்கழி வளர்பிறை ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. திதிகளில் ஏகாதசி 11வது நாள். ஏகாதசிக்கு முதல்திதியான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். தசமியன்று ஒருவேளை உணவும், மறுநாளான ஏகாதசியன்று பட்டினியும் இருக்க வேண்டும். துளசி நீர் குடிக்கலாம். உடல்நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். 
ஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின் திருநாமங்களை சொல்ல வேண்டும். விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். அதன் பிறகு சாப்பிட வேண்டும். இதனை பாரணை என்பர். பாரணையில் 21 விதமான காய்கறிகள் இடம் பெற்றிருக்கும். இயலாதவர்கள் அவரவர் வசதிக்கேற்ப சமைத்துக் கொள்ளலாம். அகத்திக்கீரை, நெல்லிக்காய் அவசியம் சேர்க்க வேண்டும். பாரணைக்குப்பின் உறங்கக் கூடாது. 
ஏகாதசியன்று துளசி இலை பறிக்கக் கூடாது. முதல்நாள் பறித்த இலைகளை பூஜைக்கும், தீர்த்தத்திற்கும் பயன்படுத்தலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருப்பதால் மார்கழி ஏகாதசியை வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்பர். கோயில்களில் பெருமாள் இந்நாளில் பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். இதன் வழியாக கோயிலுக்குள் சென்று பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு.
ஏகாதசிக்கு பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானது. இவ்விரதத்தால் செல்வவளமும், புண்ணிய பலனும் கிடைக்கும்.

Monday 2 January 2012

பெற்றோர்-ஆசிரியர் கழக விதிகளில் திருத்தம்

சேலம், ஜன. 1: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழக விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தால் இவ்வமைப்பில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.அரசுப் பள்ளிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் (பி.டி.ஏ.) நாளடைவில் அரசியல்வாதிகளின் சங்கங்களாக மாறின. இதன்மூலம் பள்ளி நிர்வாகங்களில் ஊடுருவிய சிலர், நிதி வசூல், நன்கொடை என்ற பெயரில் பணம் குவிக்கத் தொடங்கினர். இதனால் பெற்றோர்-ஆசிரியர் கழகப் பதவிகளைக் கைப்பற்ற ஆளுங்கட்சிப் பிரமுகர்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இதையடுத்து பி.டி.ஏ. தலைவர்களாக சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரே இருக்க வேண்டும் என்று திமுக ஆட்சிக் காலத்தில் புதிய விதி கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் பெற்றோர் அல்லாதவரும், கொடையாளர்களும் பி.டி.ஏ. தலைவராகலாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அதிமுக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும் ஏழைகளாகவே இருப்பதால் அவர்களால் பள்ளியின் வளர்ச்சிக்கு நிதி உதவி செய்ய முடிவதில்லை. நிர்வாகச் சீர்கேடுகளைத் தட்டிக் கேட்கும் அளவுக்கு அவர்களிடம் விழிப்புணர்வும் இல்லை. எனவேதான் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது என்று கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.ஆனால், அரசின் புதிய உத்தரவு, பெற்றோரை முழுவதுமாக ஓரங்கட்டி பள்ளிகளில் மீண்டும் நன்கொடை வசூலுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
பல இடங்களில் பெற்றோர்-ஆசிரியர் கழகப் பதவிகளைப் பிடிக்க ஆளுங்கட்சிப் பிரமுகர்களிடையே போட்டி நிலவுவது இதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகேயுள்ள தைலாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியின் பி.டி.ஏ. பொறுப்புகளைக் கைப்பற்ற இரு தரப்பினரிடையே வியாழக்கிழமை கடுமையான போட்டி ஏற்பட்டது. அப்பள்ளியின் பி.டி.ஏ. தலைவராக உள்ள மு. வெங்கடாசலம் என்பவரை நீக்கிவிட்டு தன்னைத் தலைவராக்குமாறு, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மா. வெங்கடாசலம் என்பவர் தலைமை ஆசிரியர் மஞ்சுளாவுக்கு நெருக்குதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.இதற்காக உள்ளூர் அமைச்சரிடம் கடிதம் பெற்ற அவர், தனது தரப்பைச் சேர்ந்தவர்களுக்கே மற்ற பதவிகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினாராம்.
இதையடுத்து, மகுடஞ்சாவடி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மணி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், துணைத் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்கி அதிமுக பிரமுகருக்கு வழங்குவது, அவரது ஆதரவாளர்கள் 14 பேருக்கு பொருளாளர், இணைச் செயலர் பதவிகளை வ3ழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
பள்ளியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டுக்காகவுமே பி.டி.ஏ. அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்த முயல்வது அந்த நோக்கத்தையே சிதைப்பதாகும்.எனவே, யாருடைய குறுக்கீடும் இல்லாத சுதந்திரமான பெற்றோர்-ஆசிரியர் அமைப்புகளை உருவாக்கி, பள்ளிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

திருவள்ளூர் : திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.
திருவள்ளூர் அடுத்த, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் நடமாடிய திருச்சபைகளில் முதல் சபையாகும். ரத்தின சபை என்றழைக்கப்படும் இத்திருத்தலம், காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து, சிவபெருமானின் நடனத்தை கண்டு ரசித்த தலமாகும்.
இங்கு ஆண்டுதோறும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகம் ஆருத்ரா தரிசனம் என்றழைக்கப்படுகிறது.
"சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார் என்பதால், அந்த நட்சத்திரத்தில் இங்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்தாண்டு ஆருத்ரா தரிசனம், வரும் ஜனவரி, 8ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், இரவு 9 மணியளவில், ரத்தின சபாபதி பெருமான் ஸ்தல விருட்சத்தின் கீழ் புதிதாக நிர்மாணித்துள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருள்வார். இரவு 9.30 மணியளவில் அபிஷேகம் ஆரம்பித்து விடியற்காலை 4 மணி வரை சிறப்பாக நடைபெறும்.
அதன் பின், அலங்காரம் செய்து, அதிகாலை 9ம் தேதி 5 மணியளவில் தீபாராதனை நடைபெற்று, ஆலமர பிரகாரம் வலம் வந்து கோபுர தரிசனம் நடைபெறும். பகல் 1 மணியளவில் அனுக்கிர தரிசனமும், மறுநாள் 10ம் தேதி, காலை 8.45 மணிக்கு சாந்தி அபிஷேகம் நடைபெறும்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் தனபால் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

 http://www.dinamalar.com/district_detail.asp?id=378212