Tuesday 14 February 2012

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு நாளைமுதல் நுழைவுச் சீட்டு

சென்னை, பிப். 14: பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு வியாழக்கிழமைமுதல் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.வியாழக்கிழமை (பிப்ரவரி 16) பிற்பகலிலிருந்து சனிக்கிழமை (பிப்வரி 18) வரை நுழைவுச் சீட்டு விநியோகம் செய்யப்படும்.
மார்ச் 8-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வை 8.2 லட்சம் பேர் எழுத உள்ளனர். இவர்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனித் தேர்வர்கள்.இவர்களுக்கான நுழைவுச் சீட்டு விநியோகம் தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:தனித்தேர்வர்கள் தங்களின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்விடத்தின் அடிப்படையில் அருகில் உள்ள தேர்வு மையத்தில்பெயர்பதிவு செய்யப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு வழங்கப்படும் மையங்கள் குறித்த விவரம் அந்தந்த மாவட்டங்களில் பத்திரிகைகள் மூலம் அறிவிக்கப்படும்.தனித்தேர்வர்கள் நுழைவுச் சீட்டைப் பெற்றவுடன், அதில் அச்சிடப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம், தேர்வு எழுத பதிவு செய்யப்பட்டுள்ள பாடங்கள், தேர்வு நடைபெற உள்ள நாள் போன்ற விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.இந்த விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால், நுழைவுச் சீட்டைப் பெற்றவுடன் கூடுதல் செயலாளர் (மேல்நிலை), அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 6 என்ற முகவரியில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்ணுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெறாதவர்கள், செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும்.முதல்முறையாக மேல்நிலைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித்தேர்வர்கள் மொழிப்பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்.மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை பிப்ரவரி 20-க்குள் அணுகி அறிந்துகொள்ள வேண்டும்.
கேட்டல், பேசுதல், செய்முறைத் தேர்வு மையத்துக்குச் செல்லும்போது, விண்ணப்பத்தில் பயன்படுத்திய புகைப்படத்தின் நகலையும் எடுத்துச் செல்ல வேண்டும். 
உரிய நுழைவுச் சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார். நுழைவுச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்படாது என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment