Wednesday, 4 January 2012

ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?



மார்கழி வளர்பிறை ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. திதிகளில் ஏகாதசி 11வது நாள். ஏகாதசிக்கு முதல்திதியான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். தசமியன்று ஒருவேளை உணவும், மறுநாளான ஏகாதசியன்று பட்டினியும் இருக்க வேண்டும். துளசி நீர் குடிக்கலாம். உடல்நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். 
ஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின் திருநாமங்களை சொல்ல வேண்டும். விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். அதன் பிறகு சாப்பிட வேண்டும். இதனை பாரணை என்பர். பாரணையில் 21 விதமான காய்கறிகள் இடம் பெற்றிருக்கும். இயலாதவர்கள் அவரவர் வசதிக்கேற்ப சமைத்துக் கொள்ளலாம். அகத்திக்கீரை, நெல்லிக்காய் அவசியம் சேர்க்க வேண்டும். பாரணைக்குப்பின் உறங்கக் கூடாது. 
ஏகாதசியன்று துளசி இலை பறிக்கக் கூடாது. முதல்நாள் பறித்த இலைகளை பூஜைக்கும், தீர்த்தத்திற்கும் பயன்படுத்தலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருப்பதால் மார்கழி ஏகாதசியை வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்பர். கோயில்களில் பெருமாள் இந்நாளில் பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். இதன் வழியாக கோயிலுக்குள் சென்று பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு.
ஏகாதசிக்கு பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானது. இவ்விரதத்தால் செல்வவளமும், புண்ணிய பலனும் கிடைக்கும்.

No comments:

Post a Comment