Thursday 15 December 2011

1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ முறை

சென்னை, டிச.13: வரும் கல்வியாண்டிலிருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வியாண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 4 மாதங்கள் முதல் பருவம் எனவும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் இரண்டாம் பருவம் எனவும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய 4 மாதங்கள் மூன்றாம் பருவம் எனவும் தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:
இப்போதுள்ள முறையின்படி, மாணவர்கள் ஓராண்டு முழுவதற்கும் தேவையான புத்தகங்களைப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். புதிய பாடத் திட்டங்கள் காரணமாக புத்தகங்களின் அளவும் அதிகரித்துள்ளது. எனவே, புத்தகச் சுமையின் காரணமாக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தகச் சுமையிலிருந்து மாணவர்களை விடுவிப்பதற்காக முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு புத்தகங்கள் மூன்றாகப் பிரிக்கப்படும்.சிறிய புத்தகங்களின் மூலம் பாடத் திட்டத்தை மேலும் செழுமையானதாக மாற்றலாம். இந்த முறையின் மூலம் ஒவ்வொரு பாட வேளையும் கலந்துரையாடலுடன் கூடிய சிறந்த கற்கும் அனுபவத்தை வழங்கும். மாணவர்களின் இடைநிற்றலும் குறையும்.
ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் மேற்கொள்ளப்படும் தொடர் மதிப்பீடு மாணவ, மாணவியர் தங்களை மதிப்பீடு செய்துகொள்ள உதவும்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் பரிந்துரையை ஏற்று, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ முறையை வரும் கல்வியாண்டில் இருந்து அமல்படுத்த உத்தரவிடப்படுகிறது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment