Saturday 24 December 2011

பணிக்கு வராதவர்களுக்கும் சம்பளம்

விருதுநகர்:ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், மக்கள் நல பணியாளர்களுக்கு பதில் "பணி தள பொறுப்பாளர்கள் இருவரை, ஊராட்சி தலைவர்களே நியமித்துள்ளனர். இவர்கள் பணிக்கு வராதவர்களையும் பணி புரிந்ததாக கணக்கில் சேர்ப்பதால், பணம் பட்டுவாடா செய்யும் ஊராட்சி செயலர்கள் தவிக்கின்றனர். கிராமங்களில் வறுமையை ஒழிப்பதற்காக அரசால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்பணியை மக்கள் நல பணியாளர்கள் கண்காணித்து வந்தனர். அவர்கள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, இதை ஊராட்சி தலைவர்களால் நியமிக்கப்பட்ட "பணி தள பொறுப்பாளர்கள்' இருவர் கண்காணிக்கின்றனர்.
இவர்கள் , பணிக்கு வந்தவர்கள் பெயரை என்.எம்.ஆர். புத்தகத்தில் பதிவு செய்வர். ஊராட்சி தலைவர் தயவில் வேலை கிடைத்ததால் , பணிக்கு வராதவர்களையும், வந்ததாக பதிவு செய்வதாக ஊராட்சி செயலர்கள் புலம்புகின்றனர்.
மேலும், பணி புரிவோருக்கு பாங்க் மூலம் சம்பளம் வழங்க உத்தரவிட்டும் , யாரும் பின்பற்றுவதில்லை. இதன் மேற்பார்வை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதை பல ஊராட்சி தலைவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி , பணம் பட்டுவாடா செய்கின்றனர். இதில் பணிதள பொறுப்பாளர்களால், பணிக்கு வராமல் பதிவு செய்யப்பட்டிருக்கும் பெயர்களுக்கும் சம்பளம் வழங்க, செயலர்களை நிர்பந்திப்பக்கின்றனர். இவர்களும் ,வேறு வழியின்றி இதற்கு உடன்படுகின்றனர் .

விருதுநகர் கலெக்டர் பாலாஜி ,""வேலை செய்யாதவர்கள் பெயரையும் எழுதி, பணம் பெற முயல்வது தெரிந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும். 95 சதவீதம் பேருக்கு பாங்கில் கணக்கு தொடங்கப்பட்டு விட்டது. பாங்க் மூலமே பணியாளர்கள் பணம் எடுக்க வேண்டும் , ''என்றார்.

No comments:

Post a Comment