Saturday 17 December 2011

ஏப்ரலில் தான் 10ம் வகுப்பு தேர்வு

சென்னை:10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் நடக்கும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், ஏப்ரல் மாதம் நடக்கிறது. இத்தேர்வை, முதல் முறையாக எழுதவுள்ள தனித்தேர்வர்கள் அனைவரும், சமச்சீர் கல்வி திட்டத்தின்படியே தேர்வை எழுத வேண்டும், அறிவியல் பாடத்தில் நடக்கும் செய்முறைத் தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஏப்ரல் முதல் தேதியன்று, 14.5 வயதை பூர்த்தி செய்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
பழைய பாடத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியடைந்த மாணவர்கள், தொடர்ந்து வரும் பொதுத் தேர்வு, உடனடித் தேர்வு மற்றும் செப்டம்பர் தேர்வுகளில் பழைய பாடத் திட்டப்படியே பங்கேற்கலாம். இவர்களுக்கு, 2013 மார்ச்சில் இருந்து, சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தப்படும்.அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், 21ம் தேதி முதல், ஜனவரி 2ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்வுக் கட்டணமாக, 125 ரூபாய் செலுத்த வேண்டும்.

மெட்ரிக் மாணவர்கள்:மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித் தேர்வர்களும், பழைய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வெழுத, மேற்கண்ட அதே தேதிகளில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும், மெட்ரிக் மாணவர்கள், 135 ரூபாய் வீதமும், ஆங்கிலோ இந்திய மாணவர்கள், 85 ரூபாய் வீதமும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு இயக்குனர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment