Friday 30 December 2011

"ஆன்-லைனில்' மனு பதிவு செய்யும் முறை

நாமக்கல்: "மாவட்டத்தில், மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களை, "ஆன் லைனில்' பதிவு செய்யும் முறை துவங்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுமக்களின் கோரிக்கைகைள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்கள், தமிழக முதல்வரின் தனிப்பிரிவிலும், அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர், ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கும் மக்கள் குறைகேட்கும் நாள் கூட்டத்திலும் பெறப்பட்டு வருகிறது.
மாவட்ட கலெக்டரால், ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும், மாவட்ட அளவில் பெறப்படும் மனுக்கள், அந்தந்த மாவட்ட கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட அளவில் நடவடிக்கை விபரம் கண்காணிக்கப்பட்டு வந்தது.
தற்போது, தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்களைப் போலவே, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பெறப்படும் மனுக்களை, மாநில அளவில் கண்காணிக்க ஏதுவாக, புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த ஆணையின்படி, சாஃப்ட்வேர் வடிவமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறையில், ஒவ்வொரு கோரிக்கை மனுவுக்கும், "கோரிக்கை எண்' வழங்கப்பட்டு, கோரிக்கை வகை, தேதி, மனுதாரர் பெயர், முகவரி, தொடர்புடைய அலுவலர், கோரிக்கை விபரம், நடவடிக்கை எடுப்பதற்குரிய கால அவகாசம் போன்ற விபரங்கள் கொண்ட ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.
அதில், கோரிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மனுதாரரே நேரடியாக இணையதளத்தில் சென்று கோரிக்கை எண்ணை மட்டும் பதிவு செய்தால், அம்மனு எந்த அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது, அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்ற விபரத்தை நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இவ்விசாரணையில், மாவட்ட கலெக்டரால் பெறப்படும் மனுக்களுக்கு உண்டான பதில், மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் மனுதாரருக்கு அனுப்பப்படும். இப்புதிய முறை, நமது மாவட்டத்தில், கடந்த 19ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறையில், கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஏதுவாக, திங்கட்கிழமை தோறும் காலை 10 மணி முதல் பகல் 1 மணிக்குள், மக்கள் தங்கள் கோரிக்கை மனுவுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வர வேண்டும். காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.
இப்புதிய அரசாணை மூலம், தமிழக முதல்வர் தனிப்பிரிவு மனுக்களைப் போல் மாவட்ட கலெக்டரால் பெறப்படும் மக்கள் குறை கேட்டும் நாள் மனுக்களையும், "ஆன் லைனில்' பதிவு செய்வதன் மூலம், மாநில அளவில் அவற்றின் மீதான நடவடிக்கை குறித்து கண்காணிக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LINK: www.dinamalar.com/district_detail.asp?id=376562

No comments:

Post a Comment