Thursday 15 December 2011

இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்கு பதிவு

- என்.சரவணன் -
இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் குற்றங்களைத் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து இன்டர்நெட் மையங்களிலும் வாடிக்கையாளர்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என, போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதற்காக, இன்டர்நெட் மையங்களுக்கு, விவர பதிவு மென்பொருள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், இன்டர்நெட் மையங்களில் அந்தரங்க விஷயங்களுக்கு உலை வைக்கப்பட்டுள்ளது.அண்மையில், மூன்று நைஜீரிய நாட்டு இளைஞர்கள், இணையம் மூலம் வங்கிகளில் இருந்து 25 லட்ச ரூபாய் கொள்ளையடித்த குற்றத்திற்காக, சென்னையில் கைது செய்யப்பட்டனர். இது போன்ற குற்றங்களின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குற்றங்களுக்காக இன்டர்நெட் மையங்களை பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.
விசாரணையை எளிமையாக்க...இதுபோன்ற குற்றச் செயல்கள் குறித்து போலீசார் புலன் விசாரணை நடத்தி, பல நாட்களுக்குப் பின்னரே, குற்றவாளிகளை அடையாளம் காண முடிகிறது.தற்போது, வாடிக்கையாளர்களின் வருகை, புத்தகங்களில் பதியப்படுகிறது. ஆனால், இந்த தகவல்களைப் பராமரிப்பதும், தேடி பயன்படுத்துவதும் கடினமான காரியங்களாக போலீசார் கருதுகின்றனர்.இதை சரி செய்ய, தற்போது இன்டர்நெட் மையங்களில் கண்காணிப்பு மென்பொருளை, போலீசார் கட்டாயமாக்க உள்ளனர்.
சிறப்பு மென்பொருள் தனியார் நிறுவனம் மூலம் "கிளிங்க்' என்ற பிரத்யேக கண்காணிப்பு மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட, ஆறு மாவட்டங்களில் உள்ள இன்டர்நெட் மையங்களிலும் பொருத்த வேண்டும் என, ஐ.ஜி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.இதற்கான முதல் மாவட்டமாக, திருவள்ளூர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமல்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
மாவட்டத்தில் உள்ள, 75 இன்டர்நெட் மையங்களின் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது.நடவடிக்கைகளும் பதிவுமென்பொருள் குறித்து, இன்டர்நெட் மைய உரிமை யாளர்களிடம் எஸ்.பி., வனிதா கூறியதாவது:இதன் (புதிய மென்பொருள்) மூலம், இன்டர்நெட் மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் முழு விவரங்கள் பதிவாவதுடன், அவர்கள் என்னென்ன பணிகளைச் செய்கின்றனர் என்ற விவரமும் தெரிந்து விடும்.எவரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக அவர்களை அடையாளம் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும்.
இவ்வாறு எஸ்.பி., வனிதா கூறினார்.

பதிவாகும் தகவல்கள் : "கிளிங்க்' மென்பொருள், வாடிக்கையாளரின் விவரங்களை பதிவு செய்வது மட்டுமல்லாமல், இணைய பயன்பாட்டையும் கண்காணிக்கும். அதாவது, எந்தெந்த இணையதளங்களுக்கு நீங்கள் செல்கிறீர்கள் போன்ற விவரம் பதிவாகும் என்று, அந்த மென்பொருளைத் தயாரித்த நிறுவனத்தின் மேலாளர் விவேகானந்தன் தெரிவித்தார், ""வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன், பெயர், முகவரி, பாலினம், தொலைபேசி எண், அடையாள ஆவணத்தின் எண், தேதி உள்ளிட்ட முழு தகவல்கள் இருக்கும்.
அவர்களுக்கு ஒரு அடையாள எண் வழங்கப்படும். இந்த, "சாப்ட்வேர்' எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவுடன் இணைக்கப்படும். ஒவ்வொரு இன்டர்நெட் மையங்களுக்கு வருபவர்களின் முழு தகவல்கள், அவர்களது பிரவுசிங் விவரங்களை, இங்குள்ள போலீசார் கண்டறிய முடியும். இதனால், ஏதாவது குற்றச் செயல்கள் நடப்பது தெரிந்தால், உடனடியாக கண்டறிந்து தடுக்க முடியும்,'' என்றார்.
இது போலீசாருக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், இணைய பயனீட்டாளர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். காலப்போக்கில், கடவுச்சொல், வங்கி விவரங்கள் போன்ற விஷயங்களையும் கண்காணிப்பு மென்பொருள் என்ற பெயரில், யார் பொருத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

No comments:

Post a Comment