Friday 30 December 2011

மார்கழி பீடையை விரட்ட சங்கு ஊதல்

ராசிபுரம்: மார்கழி மாத பீடையை விரட்ட, பல ஆண்டுகளாக பூசாரிகள் இருவர், ராசிபுரம் நகரில் சங்கு ஊதும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்கழி மாதம் அதிகாலை வேளையில், தேவர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். அவ்வாறு தேவர்கள் வரும்போது, எவ்வித பீடையும் பிடிக்காமல் இருக்க, அவரவர் வீட்டு வாசலில் பசு மாட்டு சாணம் தெளித்து, கோலமிட்டு, கோலத்தின் நடுவே பிள்ளையார் வடிவில் சாணம் பிடிக்கப்பட்டு, அதன்மேல் பூசணி பூ வைப்பார்கள்.
இந்நிகழ்ச்சி, தொன்று தொட்டு தமிழர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம், ராசிபுரம் மாரியம்மன் கோவில் பூசாரிகளான மணி பண்டாரம் (35), ராஜா பண்டாரம் (32) ஆகியோர், ராசிபுரம் தெருக்களில், வலம்புரி சங்கு ஊதி, பீடைகளை விரட்டி வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
மார்கழி மாதத்தின் அதிகாலை வேளைகளில், பிரம்பை சுழற்றிக் கொண்டு, வலம்புரி சங்கை ஊதினால், கெட்ட ஆவிகள் பயந்து சென்றுவிடும். இதை மையமாக கொண்டு, நாங்கள் கடந்த, 10 ஆண்டுகளாக சங்கு ஊதி வருகிறோம்.
மார்கழி மாதம் துவங்குவதற்கு ஒரு நாள் முன் (கார்த்திகை கடைசி நாள்), ராசிபுரம்-புதுப்பாளையம் சாலையில் உள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் இருந்து கையில் பிரம்பை சுழற்றிக் கொண்டு, சங்கு ஊதியபடி கிளம்பிவிடுவோம்.
தினமும், பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை சங்கு ஊதிச் செல்வோம். இப்பணியில், எங்களது தாத்தா காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருகிறோம். டிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை, தினமும் அதிகாலை சங்கு ஊதி வலம் வருவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=376566

No comments:

Post a Comment