Saturday 17 December 2011

பள்ளிப்பட்டு அருகே திருமலை தேவஸ்தான திருமண மண்டபம்

தமிழக - ஆந்திர மாநில எல்லையில், 1.30 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், புதிய திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில், திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு, குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. தானமாக வழங்கப்படும் நிலத்தில், தேவஸ்தானத்தின் சொந்த செலவில் இந்த திருமண மண்டபங்கள் கட்டப்படுகின்றன.

இதேபோன்று, தமிழகத்தின் எல்லையோரம் பள்ளிப்பட்டு அருகே உள்ள பலிஜகண்டிகை கிராமத்தில் புதிதாக, 1.30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, 1.25 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே நேரத்தில், 400 பேர் உட்காரும் முகூர்த்த மண்டபம், 200 பேர் சேர், டேபிள்களில் உட்கார்ந்து சாப்பிடும் சாப்பாட்டு அறை, சமையல் அறை மற்றும் அலுவலக அறை ஆகியவை தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது.
 இந்த திருமண மண்டபத்தின் ஈசானிய மூலையில், 5.50 லட்சம் செலவில் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபம், பள்ளிப்பட்டு - ஆர்.கே.பேட்டை சாலையில், ஆந்திர மாநிலம் பலிஜகண்டிகை கிராமத்தில் உள்ளது.

இந்த இடத்தை, ரச்சப்பாளையம் கிராமத்தை சேர்ந்த, கீதா மோகன்ராஜ் இலவசமாக வழங்கி, தன் சொந்த செலவில் மண்டபத்தின் முதல் மாடியில் விருந்தினர் ஓய்வு எடுக்க, 12 லட்சம் ரூபாய் செலவில், நான்கு அறைகள் கட்டி கொடுத்துள்ளார்."மண்டப வாடகை, நாளொன்றுக்கு, 3 ஆயிரம் ரூபாய். மின் கட்டணம் தனி. ஜெனரேட்டர் மற்றும் சமையல் சாமான் பொருட்கள் அறக்கட்டளை மூலம் வாங்கப்பட்டு, லாபம் கருதாமல் மிகக் குறைந்த வாடகையில் எடுத்து பயன் பெறலாம்' என, நிலத்தை தானமாக வழங்கிய மோகன்ராஜ் தெரிவித்தார்.

மண்டபம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி, தமிழக கிராமங்களான ஆர்.கே.பேட்டை, ராஜா நகரம், நொச்சிலி, அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, பெருமாநெல்லூர், குமாரராஜுபேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட, பள்ளிப்பட்டு தாலுகாவில் அடங்கிய, 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும், இங்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்த உதவும்.

No comments:

Post a Comment