Thursday 15 December 2011

பள்ளிகளில் கூடுதல் நேரம் வகுப்புகள்

குஜிலியம்பாறை : அரசு ஆரம்பப் பள்ளிகளில், ஜனவரி 2 முதல், கூடுதல் நேரத்திற்கு (மாலை 4.40 வரை) வகுப்புகள் நடத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில், சமச்சீர் கல்வி பிரச்னையால், பள்ளி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், ஒரு மாதம் வரை, மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதை ஈடுகட்ட, வார விடுமுறையான சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், வகுப்புகள் நடைபெறும் நேரத்தை, அரை மணி நேரம் அதிகரித்துள்ளது. காலை 9.30க்கு துவங்கி, 12.40க்கு உணவு இடைவேளை, பகல் 2 மணிக்கு துவங்கி, மாலை 4.10க்கு பள்ளி முடிந்தது.

தற்போது, ஒரு பாட வகுப்பு கூடுதலாக நடத்தி, மாலை 4.40 மணி வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 2012 ஜன., 2 முதல் ஏப்., 30 வரை, அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள், தினமும் பள்ளி நேரத்தை, 30 நிமிடங்கள் அதிகரிக்க வேண்டுமென, அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு தொடக்க கல்வித் துறை இயக்குனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, திண்டுக்கல் மாவட்ட செயலர் கணேசன் கூறுகையில், ""இம்முறை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம். ஆரம்பப் பள்ளிகளில் செயல்படுத்தினால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர். இந்த உத்தரவை, அரசு கைவிட வேண்டும்'' என்றார்.

No comments:

Post a Comment