Monday 19 December 2011

இனி மன்னார்குடி, "குரூப்' ஆதிக்கம் நிறைவேறாது

சென்னை:சசிகலா, அவரது கணவர் நடராஜன், இவர்களது குடும்பத்தினர் என, 14 பேரை அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன் மூலம், ஆட்சி மற்றும் கட்சியில் சசிகலா குடும்பம் போட்ட ஆட்டம் குளோசானது. ஜெயலலிதாவின் இந்நடவடிக்கையை, அ.தி.மு.க., தொண்டர்கள் வரவேற்றுள்ளனர்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கி, ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:அ.தி.மு.க., தலைமைச் செயற்குழு உறுப்பினர், வி.கே.சசிகலா, ம.நடராஜன், திவாகர், டி.டி.வி.தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், ராவணன், மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகியோர், இன்று முதல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட, அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அரசு நிர்வாகத்திலும், கட்சி நிர்வாகத்திலும் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து தலையிட்டு வந்தனர். இதன் மூலம், அரசுக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வந்தனர். இதையடுத்தே, இந்த அதிரடி நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளார்.அ.தி.மு.க., அரசு பதவியேற்றதும், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கப் பிரிவில், சிறப்பு அலுவலர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்ட, ஏ.பன்னீர்செல்வம், கடந்த வாரம், அப்பணியிலிருந்து ராஜினாமா செய்தார்; இதிலிருந்து பிரச்னைகள் வெளிப்படத் துவங்கின. பன்னீர்செல்வம், நடராஜனுக்கு மிகவும் நெருக்கமாவனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக ஓய்வு பெற்ற இவர், சிறப்பு அலுவலராகப் பணியில் அமர்த்தப்பட்டார்.கோட்டையில், அதிகார மையமாக விளங்கிய இவர், அதிகாரிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம், அரசு டெண்டர்களை முடிவு செய்தல் என, அனைத்திலும் தலையிட்டு வந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர்களும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், கோட்டையில் உள்ள இவரது அறைக்கு வந்து, இவரை சந்தித்து விட்டு செல்லும் நிலையில் இவர் இருந்தார்.

இத்தகவல்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த திருமலைச்சாமி மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது போன்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டு இருக்கையில், சசிகலா போயஸ் தோட்டத்தில் தங்குவதில்லை என்றும், இளவரசியின் வீட்டில் அவர் தங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியானது.இதனால், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகமாகி, எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதன் எதிரொலியாக, சசிகலா, நடராஜன் மற்றும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 14 பேரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கி, ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.முதல்வரின் நடவடிக்கை மூலம், இனி மன்னார்குடி கும்பலின் அட்டூழியம் முடிவுக்கு வந்ததாக, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். கட்சியிலிருந்து, சசிகலா குடும்பத்தினர் நீக்கப்பட்டதை வரவேற்று, அ.தி.மு.க.,வினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அப்போது, அவர்களில் சிலர் கூறும் போது, "சசிகலா கும்பலை விரட்டியடித்து ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம், அவருக்கு ஏற்படவிருந்த அவப்பெயர் தடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

24 மணி நேரம் கெடு? சசிகலா, நடராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் சென்னையிலிருந்து, 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ராவணன், மோகன் ஆகியோர் வீடுகளில் போலீசார் நடத்திய ரெய்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

கட்சியில் இருந்தாரா நடராஜன்: ஜெயலலிதாவுக்கு, முதன் முதலில்மனைவி சசிகலாவை அறிமுகம் செய்த நடராஜன், பிற்காலத்தில் பின்புலத்தில்இருந்து சசிகலாவையும் கட்சியையும்இயக்க ஆரம்பித்தார்.இதனாலேயே 1992ல், நடராஜனுடன்கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என ஜெயலலிதா அறிவித்தார். அப்போதே அவர் கட்சியில்உறுப்பினராக இருந்தாரா இல்லையா, எனகட்சியினருக்கே தெளிவாக தெரியவில்லை.1996ல் கருத்து வேற்றுமை ஏற்பட்டபோது, சசிகலாவையும் நடராஜனையும்கட்சியை நீக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். மூன்று மாதங்களில் சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டார். அப்போதும்நடராஜனின் நிலைமை தெரியவில்லை.பின், சசிகலாவுக்கு தலைமை செயற்குழுஉறுப்பினர் பதவி தரப்பட்டபோது கூட,நடராஜனுக்கு பதவி தரப்படவில்லை. இருப்பினும் அவர் கட்சியில், "நிழல்'மனிதராகவே வலம் வந்தார்.
சசிகலாவும்நடராஜனும் ரகசியமாக சந்தித்துக்கொள்வதாக அவ்வப்போது தகவல்கள் வந்தன.கட்சிக்காரர்கள் பலரும் நடராஜனுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தனர். இந்நிலையில் சசிகலாவின் கூட்டத்துடன்சேர்த்து, நடராஜனும் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் வினோதம் என்னவென்றால், கட்சியில் இருக்கிறாரா இல்லையா என கட்சியினருக்கு தெரியாமலேயே,நடராஜன் நீக்கப்பட்டுள்ளார்.

 சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு.

குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி : முதல்வருக்கு அரசியல் ஆலோசனை கூறும் முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினர் கட்டிய கட்டடத்திற்கு, சி.எம்.டி.ஏ., அனுமதி பெறுவதற்கு சசிகலா உறவினர் ஒருவர் பணம் கேட்ட தகவல், முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சகிகலா குடும்பத்தினரை மட்டும் காப்பாற்றுவதற்காக, சட்ட நிபுணர் ஒருவர் மூலமாக, முன்னாள் நீதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய தகவலும் கிடைத்துள்ளது.சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதற்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு சென்றனர். அப்போது, அங்கு சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரும் சென்றுள்ளனர். முதல்வர் பெங்களூரு கோர்ட்டிற்கு சென்ற போது, சசிகலா குடும்பத்தினர் யாரும் வரவில்லை; இதுவும் முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முதல்வர் யார்?தி.மு.க., குடும்பத்தினர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் நடத்தும் மதுபான நிறுவனங்களுக்கு, டாஸ்மாக் கடைகளில் விற்பதற்கான ஏற்பாடுகளை சசிகலா உறவினர்கள் செய்துள்ளனர். பிரபல மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த தகவலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.இவை அனைத்தும் விட மிக முத்தாய்ப்பாக, சொத்து குவிப்பு வழக்கில் முதல்வருக்கு எதிரான தீர்ப்பு கிடைக்குமானால், அடுத்த முதல்வர் யாரை நியமிக்கலாம் என்பதை ஜோதிடர் மூலம் சசிகலாவின் உறவினர்கள், பிரபல ஜோதிடர் ஒருவரை சந்தித்து, மூத்த அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும், ஜூனியர் அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சரின் ஜாதகத்தை ஜோதிடர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஜூனியர் அமைச்சரை தேர்வு செய்யலாம் என ஜோதிடர் தெரிவித்த தகவலும் கசிந்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் புகார்: வட மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், தங்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வையுங்கள் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கான காரணங்கள் குறித்து முதல்வர் கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது, தி.மு.க.,வுக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு, முக்கிய பதவி கொடுப்பதற்கு சசிகலா உறவினர்கள் படாத பாடு படுத்திய விவரங்களையும் அதிகாரிகள், முதல்வரிடம் பட்டியலிட்டுள்ளனர். கடந்த பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் சீட் வழங்கப்பட்டதில், சசிகலாவின் உறவினர்கள் பல கோடிகளை வசூலித்த புகாரும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பலர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அவர்களை முதலில் மாற்ற வேண்டும். அவர்களில் சிலர், தம் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். பாதுகாப்பு பணி போலீசாரின் சகோதரர் ஒருவர், எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். எங்களை, "சின்னம்மா போலீஸ்' என வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

டாஸ்மாக்கில் ஆதிக்கம், கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் தேர்விலும், மண்டலக் குழுத் தலைவர்கள் நியமனத்திலும், மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திலும் வசூல் வேட்டை, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில், தி.மு.க., ஆதரவாளர்கள் நியமனம், ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த நடவடிக்கை குறித்து தகவல் பரிமாற்றம் செய்தது, கட்சிக்குள் கோஷ்டிப் பூசலை வளர்த்தது, அதிகார மையங்களின் அராஜகச் செயல் போன்றவை தான், சசிகலாவின் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.இவ்வாறு அவர் கூறினார்.
 விசுவாசமான பெண்ணை ஓரங்கட்டி விட்டு,
போயஸ் கார்டனுக்குள், "சிடி'க்களை கொடுப்பதற்காக உள்ளே நுழைந்த சசிகலா, கார்டனில் முதல்வருக்கு அடுத்த நிலையில் இருந்த விசுவாசமான பெண்ணை ஓரங்கட்டி விட்டு, நம்பர் 1 இடத்திற்கு முன்னேறிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை போயஸ் கார்டனுக்கு செல்லும் முக்கிய சாலையில், வீடியோ கடை வைத்திருந்த சசிகலா, ஜெயலலிதா விரும்பிப் பார்க்கும், "சிடி'க்களை கொடுப்பதற்காக, கார்டனுக்குள் தயங்கி... தயங்கி... எட்டிப் பார்ப்பார். வீட்டில் சமையல் மற்றும் பராமரிப்பு வேலைகளை செய்து வந்தவர் ராஜம் என்ற பெண். மயிலாப்பூரில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்தவர் ராஜம். துணிக்கடைக்கு சேலை எடுக்க ஜெயலலிதா செல்லும்போது, உரிமையாக பழகியவர் தான் ராஜம்.

துணிக்கடை வேலையை விட்டதால், ஆதரவில்லாமல் இருந்த ராஜத்தை, கார்டனுக்கு அழைத்து, வீட்டின் சாவியை கொடுத்தார் ஜெயலலிதா. கார்டனுக்கு வரும் சசிகலாவை, வீட்டிற்குள் அழைத்து சாப்பாடு போட்டு ஆதரவு கொடுத்த ராஜத்தை, மெல்ல மெல்ல ஓரங்கட்டிய சசிகலா, நாளடைவில் கார்டனுக்குள் நுழைந்தார். வெளியாட்கள் பலர், கார்டனுக்கு வந்து செல்வதை தட்டிக் கேட்ட ராஜத்துக்கு, மிரட்டல் விடுக்கப்பட்டதால், ஒரு கட்டத்தில், கார்டனை விட்டு வெளியேறினார் ராஜம்.

ஏறக்குறைய ஜெயலலிதாவின் தாய் போலத் தான் கார்டனில் இருந்தார் ராஜம்.
மீண்டும் ராஜத்தை கார்டனுக்குள் கொண்டு வந்த ஜெயலலிதா, "நான் இருக்கிறேன்... யாருக்கும் பயப்படக் கூடாது' எனக் கூறி, வீட்டின் சாவியை கொடுத்தார். அப்போது கூட சசியை காட்டிக் கொடுக்காத ராஜம், குடும்பச் சூழ்நிலையால் வெளியேறியதாக கண்கலங்கினார்.

ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது, சிறை வரை சென்று, ஜெயலலிதாவை பார்த்த ராஜம், வீட்டில் இருந்து சமையல் செய்து எடுத்துச் சென்றார். அப்போது, ராஜத்திடம் நெகிழ்ந்த ஜெயலலிதா, "சிறையில் தள்ளியவுடன் எல்லாரும் ஓடிட்டாங்க... நீ மட்டும் தான் என்னை பார்க்க வந்திருக்க' என நெகிழ்ந்துள்ளார். அத்துடன், "சிறையில் உடுத்த மாற்றுப் புடவை வேண்டும்' என்று ஜெயலலிதா கேட்டுள்ளார்.

கையில் உள்ள பணத்தை வைத்து, நூல் புடவையை வாங்கி ஜெயலலிதாவுக்கு கொடுத்தவர் தான் ராஜம். சிறையில் இருந்து வீட்டிற்கு வந்து குளித்து விட்டு, ஈரத்தலையுடன் வந்த ஜெயலலிதாவை உட்கார வைத்து, சாம்பிராணி புகையை போட்டு, "நீங்க மீண்டும் பெரிய நிலைக்கு வருவீங்கம்மா' என ஆறுதல் கூறியதுடன், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு பயந்து, வீட்டை விட்டு ஓடி விடாமல், கார்டனிலேயே இருந்தவர் தான் ராஜம்.

ஒரு கட்டத்தில், "சசியின் போக்கு சரியில்லம்மா' என, ராஜம் சொன்னதை அடுத்து, சசிகலாவை கார்டனில் இருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. இரவு முழுவதும், கார்டனுக்குள் திறந்த வெளியில் படுத்து உறங்கிய சசிகலாவை, மறு நாள் காலையில், இரக்கப்பட்டு வீட்டிற்குள் அனுமதித்தார் ஜெயலலிதா. இது போன்று, பல முறை சசியை வெளியேற்றி, மீண்டும் வீட்டிற்குள் சேர்த்துள்ளார். காலப்போக்கில், ராஜத்தின் வாயை அடக்கி, கார்டனில் ஆட்சியைப் பிடித்து விட்டார் சசிகலா.


ஜெயலலிதாவும், சசிகலாவும் உடன்பிறவா சகோதரிகளாக இருந்த நிலையில், சசிகலாவும் அவரது ஆதரவாளர்களும் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளதால், 30ம் தேதி நடைபெறும் செயற்குழுவில், கட்சியில் பெரும் மாற்றமும், இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையிலும் அதிரடி மாற்றம் வரும் என, பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவும், அவரது குடும்பத்தினர் 13 பேரின் உறவுகள் பிரிந்து, கட்சியிலிருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

அனைத்திலும் ஆதிக்கம் : இதுகுறித்து, கட்சி வட்டாரத்திலும், அரசு வட்டாரத்திலும் கிடைத்த தகவல்கள் வருமாறு: ஆட்சி வந்தது முதல், அமைச்சரவையிலும், அதிகார வட்டத்திலும், சசிகலாவின் ஆதரவு ஆட்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு துறையிலும், உயரதிகாரிகளின் டிரான்ஸ்பர், கான்ட்ராக்ட் பணிகள் உள்ளிட்டவை, சசிகலா ஆட்களின் உத்தரவில் தான் நடந்துள்ளன.

குறிப்பாக, தொழிற்துறையில் இது தொடர்பாக, பல திரைமறைவு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. சிவில் சப்ளைஸ் துறையில் உணவுப் பொருட்கள் வாங்குதல், மின்சாரத் துறையில் தனியாரிடம் மின் கொள்முதல், மின் வாரியம், டான்சி, தொழிற்துறை உள்ளிட்டவற்றில் புதிய கான்ட்ராக்ட் பணிகள், பழைய இரும்பு (ஸ்க்ரேப்) விற்பனை போன்றவற்றில், பெரும் தலையீடுகள் இருந்துள்ளன. இலவச திட்டங்களுக்கான கொள்முதல்களிலும், பல பேரங்கள் நடந்துள்ளன.

இதேபோல், தி.மு.க.,விலுள்ள பல வி.ஐ.பி.,க்கள் மீதான நில அபகரிப்பு வழக்குகளில், போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க, சசிகலாவின் பெயரைச் சொல்லி, பேச்சு நடந்திருக்கிறது. உயர்கல்வி, சுகாதாரம், இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, சமூக நலம், வேளாண்துறை உள்ளிட்டவற்றில், பல்வேறு டிரான்ஸ்பர் மற்றும் கான்ட்ராக்ட் பணிகளில், பெரும் குளறுபடி ஏற்படுத்தியதாக, சசிகலா குடும்பத்தினர் மீது புகார்கள் எழுந்தன.

மிடாஸ் விவகாரம் : இதேபோல், சசிகலாவுக்குச் சொந்தமான, "மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் லிமிடெட்' நிறுவனத்திற்கு மட்டும், மதுவகைகள் தயாரிப்புக்கான, "ஸ்பிரிட்' தருவதில், பல தில்லுமுல்லுகள் நடந்ததாகத் தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்ட, தனியார் மது தொழிலதிபர்களும் இந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிகிறது. தனியார் சர்க்கரை ஆலைகளில் சிலவற்றில், இதற்கான பணம் கொடுப்பதிலும் பேரம் நடந்ததாக கூறப்படுகிறது.

மின்துறையில் கான்ட்ராக்ட் பணி பார்க்கும் ஒரு நிறுவனம், தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீராசாமிக்கும், துரைமுருகனுக்கும் வேண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தொடர்பாக எழுந்த ஒரு பிரச்னையில், விதியை மீறி அவர்களுக்குச் சாதகமான முடிவு எடுக்க, சசிகலா ஆதரவாளர்கள் சிலர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, பல்வேறு புகார்கள் கார்டனுக்கு தொடர்ந்து வந்துள்ளன. ஆனால், சில அதிகாரிகளும், அதிகார மையத்தில் இருந்த சிலரும் அவற்றை முதல்வரின் கவனத்திற்கு செல்லவிடாமல் தடுத்து விட்டனராம்.

பத்திரிகை ஆசிரியர் : இதேபோல், பெரும்பான்மையான புதிய அமைச்சர்கள் நியமனத்திலும், சசிகலா, நடராஜன், தினகரன், ராவணன் மற்றும் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் பின்னணிகள் இருந்துள்ளன.

இந்த பிரச்னைகள் குறித்து, அதிருப்தி அடைந்த பலர், தங்களது எண்ணக் குமுறல்களை, முதல்வருக்கு வேண்டப்பட்ட அரசியல் ஆலோசகரான, "மூத்த பத்திரிகை ஆசிரியருக்கு' ஆவணங்களுடன் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று முறை, முதல்வரை சந்தித்து, பிரச்னையின் தீவிரம் குறித்து பேசியுள்ளார். இறுதி முடிவெடுப்பது குறித்து, நேற்று முன்தினம் காலையிலும் வந்து, பேசிய பின்னர் தான், சசிகலா குடும்பத்தினரை கூண்டோடு வெளியேற்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலாகாகளில் மாற்றம் : சசிகலா குடும்பத்தினரின் வெளியேற்றம், தமிழக அமைச்சரவையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி, பச்சைமால், நத்தம் விஸ்வநாதன், டாக்டர் விஜய், வைத்தியலிங்கம், கோகுல இந்திரா, பழனியப்பன், வளர்மதி, ஆனந்தன், ஜெயபால், செந்தூர்பாண்டியன், எடப்பாடி பழனிச்சாமி, காமராஜ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் செல்வராஜ் உட்பட ஏராளமான அமைச்சர்களின், இலாகாகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், வரும் 30ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க., செயற்குழுவில், கட்சியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 தொண்டர்களுக்கு இனிப்பு
சென்னை : அ.தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து, சசிகலா நீக்கப்பட்டதை வரவேற்கும் வகையில், போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதா இல்லம் அருகில், அ.தி.மு.க.,வினர் நேற்று திரளாகக் கூடி, ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி, மகிழ்ச்சி அடைந்தனர்.

அ.தி.மு.க.,விலிருந்து சசிகலா உட்பட 14 பேரை, நேற்று அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். இந்த அறிவிப்பு, நேற்று வெளிவந்ததும், போயஸ் தோட்டத்திற்கு அ.தி.மு.க.,வினர் படையெடுத்து வந்தனர். சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க.,வினர் திரளாக காணப்பட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா இல்லம் அருகே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், திரளாக வந்த கட்சியினரை தடுத்து நிறுத்தினர். சசிகலாவை நீக்கியதை வரவேற்கும் வகையில், ராயபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க., தொண்டர் ஆனந்தன் உட்பட சிலரும், மகளிர் அணியை சேர்ந்த சிலரும், அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அவர்களை தொடர்ந்து, வள்ளி, மஞ்சுளா என்ற இரு பெண்கள், பட்டாசு வெடிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தொண்டர்கள் சிலர், நிருபர்களிடம் கூறும்போது, "சசிகலா மீது நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறோம்.

இந்த நடவடிக்கை, கண் துடைப்பு நாடகமாக இருக்கக் கூடாது. உண்மையான நடவடிக்கையாக இருந்தால், லட்சக்கணக்கான தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவர். இனிமேல், அ.தி.மு.க.,வை யாரும் அசைக்க முடியாது. அ.தி.மு.க., ஒரு இரும்புக் கோட்டையாக விளங்கும்' என்றனர்.

மொபைல்போனுக்கு தடை : போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு மொபைல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசிகலாவை வெளியேற்றியதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. வீட்டிற்குள் அரசு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், பாதுகாப்பு போலீசார் மற்றும் வீட்டின் ஊழியர்கள் யாரும் மொபைல்போன் கொண்டு செல்லக் கூடாது என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன்களை தங்களது காரில் வைத்து விட்டு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டிற்குள் நடக்கும் ரகசிய பேச்சுக்களை, மொபைல்போன் மூலம் கட்சி நிர்வாகிகள் டேப் செய்து விடுகின்றனர் என்றும், வெளியே பல தகவல்களை சொல்லி விடுகின்றனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 மொட்டை அடித்து மகிழ்ச்சி
திருப்பூர் : அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா குடும்பத்தினரை நீக்கியதால், திருப்பூரில் அ.தி.மு.க.,வினர் மொட்டை அடித்தும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவர்கள் குடும்பத்தினர், நேற்று அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டனர். இச்செய்தி வெளியாகியதும், திருப்பூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே கூடிய அ.தி.மு.க.,வினர் சிலர், பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிர்வாகிகள் ஒன்பது பேர் மொட்டை அடித்து பட்டாசு வெடித்தனர்; கட்சித் தொண்டர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மொட்டை அடித்திருந்தவர்கள் கூறுகையில், "எம்.ஜி.ஆர்.,காலத்தில் உண்மையான விசுவாசிகளுக்கு கட்சியில் மதிப்பு இருந்தது. முதல்வர் ஜெ., பொது செயலாளரானதும், சசிகலாவின் குடும்பம் அவரை சூழ்ந்து கொண்டது. யாருமே பொது செயலாளரை சந்தித்து பேச முடியாத, புகார் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரதிநிதிகளை வைத்து, சசிகலா குடும்பம், கட்சியை கார்ப்பரேட் கம்பெனி போல் நடத்தி வந்தது. உண்மையான தொண்டர்களை ஜெ.,விடம் நெருங்கவிடாமல் தடுத்தனர். இதனால், மக்களிடமும், அதிகாரிகளிடமும் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வந்தது. கட்சிக்குள்ளேயும், பணம் கொடுத்தால் மட்டுமே பதவி கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
தற்போது ஆட்சி அமைந்தபின், அரசுக்கு களங்கம் ஏற்படும் வகையிலான செய்திகள் வெளிவரத் துவங்கியதும், சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதன் மூலமாக, கட்சியையும், முதல்வரையும் பிடித்திருந்த குடும்ப சனி விலகி விட்டது' என்றனர்.
  ரகசிய பைல், முதல்வரின் கண்ணில்...
டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், முதல்வரின் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டது. அந்த பைலை, வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதன் பின்னர் தான் சசிகலாவின் ஆதரவர்களாக வலம் வந்த அதிகாரிகள், ஒவ்வொருவராக, "கழற்றி' விடப்பட்டுகின்றனர்.

"எம்.ஜி.ஆர்., கூட இந்தளவிற்கு தனி மெஜாரிட்டியில் ஜெயிக்கலைங்க... இந்தம்மாவிடம் (ஜெயலலிதா) பொதுமக்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க' என்ற பேச்சு, தமிழகத்தின் அடிமட்ட அரசியல் தொண்டனிடம் இருந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பேசப்பட்டது.

முதல்வரின் நிழலாக பின் தொடரும் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தில் நடப்பது எங்கள் ஆட்சி' என்ற தோரணையில் தலைமைச் செயலகத்தில் வலம் வந்தனர்.தற்போது நீக்கப்பட்ட, 14 பேரில் ராகவன் என்பவர், தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்தில், சி.எம்.டி.ஏ., பிரின்சிபல் செக்ரடரி தயானந்த கட்காரியை போனில் அழைத்து, "நாங்கள் சொல்லும் பைலில் கையெழுத்து போடா விட்டால் நடப்பதே வேறு' என மிரட்டியுள்ளார்.

அந்த நபர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை என, தலையிட்டு, கடைசியாக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையிலும் தலையை நீட்டினார். "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் ஆசியுடன், கடந்த ஆட்சியில் சென்னையில் பணியாற்றி வந்த, "ஜிம் பாடி பில்டர்' ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கார்டன் அதிகார நபரை பிடித்தார்.அடுத்த சில நாட்களில் அந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, மேற்கு மண்டலத்தில் உள்ள வளமான மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். இது போன்ற ஏகப்பட்ட தலையீடுகள், போலீஸ் துறையில் அரங்கேறின.

கார்டன் அதிகார மையத்தினரால் நடத்தப்படும் வசூல் வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து ரகசிய, "பைல்' முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அந்த பைலை முதல்வரின் பார்வையில் படாமல் கார்டனில் உள்ள சிலர் மறைத்து விட்டனர்.டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், ஒரு மாதத்திற்கும் மேலாக கார்டனில் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இம்மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை, அந்த பைலை ஜெயலலிதா படித்துள்ளார்.
அதில், சசிகலா மற்றும் அவரது வகையறாக்கள் ஒவ்வொருவரை பற்றியும், வசூல் வேட்டை பற்றியும் விலாவாரியாக, "புட்டு புட்டு' வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கார்டன் அதிகார மையத்தினரால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் தகவல், நியாயமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் முதல்வரிடம் தயக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின் தான், முதல்வர் சாட்டையை சுழற்றினார். தலைமைச் செயலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, சிறப்பு திட்ட செயலரான பன்னீர்செல்வம் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.அவர், சசிகலாவின் கணவர் நடராஜனின் தீவிர விசுவாசி. பன்னீர்செல்வம், ஐ.ஏ.எஸ்., ஆனதற்கு, நடராஜன் உதவியதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான, திருமலைச்சாமி, கார்டனில் இருந்து விரட்டப்பட்டார்.இவர், கார்டன் அதிகார மையத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கார்டனில் நடக்கும் விஷயங்களை கேட்டு முகம் சிவந்த ஜெயலலிதா, திருமலைச்சாமியிடம் நேரடியாக விசாரித்த போது, பல தகவல்கள் முதல்வரை அதிர்ச்சியடை செய்தன.
திருமலைச்சாமியின் வாக்கு மூலத்தை, அமைச்சர்களை நேரில் அழைத்து விசாரித்து, நூறு சதவீதம் உறுதி செய்தார் ஜெயலலிதா. இனிமேலும் தாமதித்தால் எல்லாம் வீணாகிப் போய்விடும் என்ற எண்ணத்தில், கழக தலைமைக் செயற்குழு குழு உறுப்பினர் சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் உட்பட, 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், மற்ற பொறுப்புகளில் இருந்து ஜெயலலிதா விடுவித்து உத்தரவிட்டார்.

விடுமுறையில் ஓட்டம்:கார்டன் அதிகார மையத்திற்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் பலர், செய்தித் துறையில் பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள், "எம்.என்., - எம்.ஆர்.,' வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து வந்துள்ளனர். நேற்று, ஜெ., வின் அதிரடியால், செய்தித் துறையில் பணியாற்றி வந்த ஆதரவு அதிகாரிகள் சிலர், மொபைல் போனை, "ஆப்' செய்து விட்டு, "எஸ்கேப்' ஆகி விட்டனர். முதல்வரின், "ஹிட் லிஸ்டில்' உள்ளவர்களில் சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 இதுகுறித்து ஜெயலலிதா  வெளியிட்ட செய்திக்குறிப்பு:  "அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் வி.கே. சசிகலா, எம். நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி. பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ். வெங்கடேஷ், எம். ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி. மகாதேவன், தங்கமணி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்; இவர்களுடன் அதிமுகவினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது' என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
சசிகலாவின் உறவினர்கள்: நீக்கப்பட்டவர்கள் அனைவரும் சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள். சசிகலாவின் கணவர்  நடராஜன், தம்பி திவாகர், அக்கா மகன்கள் டி.டி.வி. தினகரன், வி. பாஸ்கரன், வி.என். சுதாகரன், அண்ணன் மகன் டாக்டர் எஸ். வெங்கடேஷ், மற்றொரு அண்ணனின் மகன்கள் டி.வி. மகாதேவன், தங்கமணி, நடராஜனின் சகோதரர் எம். ராமச்சந்திரன், சித்தப்பா மருமகன் ராவணன் மற்றும் உறவினர்கள் அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன் ஆகிய 14 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.  நீக்கப்பட்டவர்களில் சசிகலா, அ.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். மற்றவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவி தவிர வேறு எந்தப் பொறுப்பிலும் இல்லை. டி.டி.வி. தினகரன் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும், டாக்டர் வெங்கடேஷ் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை பொறுப்பாளராகவும் பதவி வகித்துள்ளனர். 
 1984-ல் தொடங்கிய நட்பு: சென்னை ஆழ்வார்பேட்டையில் "வினோத் விடியோ சர்வீஸ்' என்ற விடியோ கடையை நடத்தி வந்த சசிகலாவும், தமிழக அரசில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த எம். நடராஜனும் 1984-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு அறிமுகமானார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்திரலேகா மூலம் இவர்கள் அறிமுகமானதாகக் கூறப்படுகிறது.  மாநிலங்களவை உறுப்பினராகவும், அ.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா தமிழகம் முழுவதும் அப்போது சுற்றுப் பயணம் செய்து வந்தார். தனது சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை விடியோ படம் பிடிக்கும் பணியை சசிகலாவிடம் வழங்கினார். தொடர்ந்து, வீடு மற்றும் அலுவலக நிர்வாகத்தையும் சசிகலாவிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு படிப்படியாக நட்பை வளர்த்துக்கொண்ட சசிகலாவும் அவரது உறவினர்களும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்கள். 
 1991-ல் முதன்முறையாக முதல்வரான ஜெயலலிதா, சசிகலாவின் அக்கா மகன் வி.என். சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்தார். அவருக்கு மிகப்பெரிய அளவில் திருமணத்தையும் நடத்திவைத்தார்.  1996 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதற்கு சசிகலாவும், அவரது உறவினர்களுமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து சசிகலாவுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என ஜெயலலிதா அறிவித்தார். போயஸ் கார்டன் இல்லத்திலிருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். ஆனால், ஒரு சில மாதங்களில் மீண்டும் அவர் ஜெயலலிதாவின் வீட்டிற்கே திரும்பவும் அழைக்கப்பட்டு விட்டார். 
 சசிகலாவும் அவரது உறவினர்களும் கட்சியிலும், ஆட்சியிலும் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தபோதும் இருவருக்கும் இடையேயான நட்பு தொடர்ந்தது. அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் சசிகலாவின் நெருக்குதல் காரணமாக வெளியேற நேர்ந்ததாகத் தெரிவித்து வந்தனர்.  இந்த நிலையில் சசிகலா, அவரது கணவர் நடராஜன் உள்பட 14 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
  டிசம்பர் 30-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு சென்னை: அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் சென்னையை அடுத்த வானகரத்தில் டிசம்பர் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளன.  இக் கூட்டங்கள் நடைபெறவுள்ள சூழ்நிலையில், சசிகலாவும் அவரது உறவினர்கள் சிலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment